அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
“ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது” என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கொள்கையில் அவருக்கு ஈடு இணையற்ற பின்னணி இருப்பதாகவும், 2017 முதல் பாதுகாப்புத் துறையின் செயலாளர் உட்பட ஆஸ்திரேலிய பொதுச் சேவையில் மூத்த பதவிகளில் பணியாற்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 முதல் 2014 வரை இந்தோனேசியாவிற்கும், 2005 முதல் 2008 வரை ஈரானுக்கும் ஆஸ்திரேலிய தூதராகப் பணியாற்றிய மோரியார்டி, அரசாங்கத்தில் விரிவான அனுபவத்தைக் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
பிரதமர் அலுவலகத்தில் மூத்த பதவிகளை வகித்து, சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பின்னர் அப்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் தலைமைப் பணியாளராகவும் பணியாற்றியுள்ளார் மோரியார்டி.
2015 ஆம் ஆண்டில், பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு ஆஸ்திரேலியாவின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக மோரியார்டி நியமிக்கப்பட்டார், மேலும் பாதுகாப்புத் துறையில் அவர் பணியாற்றிய காலத்தில், பாதுகாப்பு பட்ஜெட்டில் “வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகரிப்பை” மோரியார்டி மேற்பார்வையிட்டதாகக் கூறினார்.
AUKUS இன் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் அவர் துறைக்கு தலைமை தாங்கியுள்ளார்.
“அமெரிக்காவிற்கான முன்னாள் ஆஸ்திரேலிய தூதர் டாக்டர் கெவின் ரூட்டின் சேவைக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அல்பானீஸ் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பதட்டங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பதவிக்காலத்திற்குப் பிறகு, ரூட் எதிர்பார்த்ததை விட ஒரு வருடம் முன்னதாகவே தனது தூதர் பதவியில் இருந்து விலகினார்.





