முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும், போலி Botox பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய எச்சரிக்கையின்படி, போலி Botox குப்பிகள் மூன்றாவது முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அவை உண்மையான தயாரிப்புகளுக்கு ஒத்த பிராண்டட் பேக்கேஜிங்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
C8478C4 தொகுதி எண்ணைக் கொண்ட இந்த தயாரிப்புகள் உண்மையானவை அல்ல என்பதை உற்பத்தியாளர் AbbVie உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் போலி மருந்துகள் வெளிநாட்டு வலைத்தளங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பாதுகாப்பு அல்லது செயல்திறன் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும், எனவே இந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் TGA கூறுகிறது.
போலியான Botox-இன் பயன்பாடு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும், போட்யூலிசம் போன்ற ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இந்த மருந்துகளை அனுபவம் வாய்ந்த, பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணரால் மட்டுமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், எல்லையில் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு போலி Botox தயாரிப்புகளையும் பறிமுதல் செய்து அழிக்க ஆஸ்திரேலிய எல்லைப் படைக்கு அறிவுறுத்தியுள்ளதாக TGA கூறுகிறது.





