குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளது.
அமெரிக்காவின் New Mexico மாநில அரசு தொடர்ந்த இந்த வழக்கு, சமூக ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டில் ஜூரி சபையினூடாக (Jury Trial) விசாரணைக்கு வரும் முதலாவது வழக்காகும்.
Facebook, Instagram மற்றும் WhatsApp ஆகிய தளங்கள் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை Meta நிறுவனம் ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களை இலக்கு வைக்கும் நபர்களுக்கு (Predators) எவ்வித கட்டுப்பாடும் இன்றி Meta நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகவும், இதன் மூலம் சிறுவர்கள் மனித கடத்தல் மற்றும் நேரடி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களை (Content) அனுமதிப்பதன் மூலம் நிறுவனம் இலாபம் ஈட்டுவதாகவும் சட்டமா அதிபர் சாடியுள்ளார்.
சமூக ஊடகங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து உலகளவில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு Meta நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமையவுள்ளது. பாலியல் குற்றவாளிகள் சிறுவர்களைத் தொடர்பு கொள்வதை Meta நிறுவனம் தடுக்கத் தவறிவிட்டது என்பதே இந்த வழக்கின் மையக்கருத்தாகும்.





