அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம் அமெரிக்காவை வெறுக்கும் செயற்பாடுகளின் மையமாக (hate-America activism) மாறிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Harvard பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த பட்டதாரி நிலை இராணுவப் பயிற்சிகள், ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் சான்றிதழ் கற்கைநெறிகளை Pentagon நிறுத்திக்கொள்ளவுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம், விழிப்புணர்வு சித்தாந்தங்களின் தொழிற்சாலையாகவும் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளின் புகலிடமாகவும் உருவெடுத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
நீண்டகாலமாக எமது சிறந்த இராணுவ அதிகாரிகளை Harvard பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அங்கிருந்து திரும்பி வரும் அதிகாரிகள் இராணுவ வீரர்களாக இல்லாமல், உலகளாவிய மற்றும் தீவிரவாத சித்தாந்தங்கள் நிறைந்தவர்களாகவே திரும்புகின்றனர் என்று பீட் ஹெக்செத் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது அங்கு கல்வி பயின்று வரும் இராணுவ வீரர்கள் தமது படிப்பை நிறைவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் எதிர்வரும் காலத்தில் இந்த உறவுகள் உத்தியோகபூர்வமாகத் துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் ஹமாஸ் அமைப்பைக் கொண்டாடும் சூழல் நிலவுவதாகவும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் பென்டகன் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்கக் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிற முன்னணி பல்கலைக்கழகங்களுடனான உறவுகளையும் மறுபரிசீலனை செய்யப் போவதாகப் பென்டகன் எச்சரித்துள்ளது.





