டெல்லியில் உள்ள BBC செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை சில நாட்களுக்கு முன்பு BBC நிறுவனம் வெளியிட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், BBC நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை BBC உருவாக்கியது.
நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 17-ஆம் திகதியும் இரண்டாம் பாகம் 24-ஆம் திகதியும் வெளியானது.
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த மத்திய அரசு, இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியது.
மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூ-டியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளுக்கு தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு கடந்த 21-ஆம் திகதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்