இந்தியாவில் புதிதாக 7,240 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேற்றை விட தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாட்டில் தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,498ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,723ஆக உள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. நாட்டின் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,701 ஆக பதிவாகியுள்ளது. இதில் மும்பை நகரத்தில் மட்டும் 1,242 பாதிப்புக்கள் அடக்கம். மகாராஷ்டிராவைப் போலவே கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்பு சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவற்றில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காம் அலை பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.