உலகளவில் குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனிசெப் எனப்படும், ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் குறித்து இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வெவ்வேறு பகுதிகளில் நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டன.
அப்போது, கொரோனா பெருந்தொற்று பரவலின் போது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதே சிறந்த முடிவாக பெற்றோர் கருத தொடங்கியது தெரியவந்தது.
சர்வதேச ரீதியாக குழந்தை திருமணம் செய்து கொண்ட சிறுமியர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெற்காசியாவில் தான். இங்கு, 29 கோடி சிறுமியருக்கு திருமணம் நடந்துள்ளது. இது உலகளவில் உள்ள சிறுமியரின் எண்ணிக்கையில் 45 சதவீதம் என்ற கணக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், இலங்கையில் பெண்களின் திருமண வயது சட்டப்படி 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, நேபாளத்தில் 20 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 16 ஆக உள்ளது.