உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் சமீப நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை காரணமாக வலுவான எதிர் தாக்குதலைத் தர முடியாமல் திணறி வருகிறது.
உக்ரைனின் 30 சதவீதமான பகுதிகளை ஆக்கிரமித்ததுடன் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சியெவெரோடொனட்க்ஸ் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷ்யா மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இதற்காக சண்டையிட்டு வரும் தங்கள் நாட்டுப் படையினருக்கு உதவுவதற்காக, கூடுதல் படையினரை ரஷியா அனுப்பி படைபலத்தை அதிகரித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு தினமும் 100-லிருந்து 200 வீரர்களை இழந்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்காலோ போடோலியாக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் போர் குறித்துப் பேசிய போப் பிரான்சிஸ் ‘ரஷ்யாவின் படைகள் மிகவும் மிருகத்தன்மையும் கொடூரமும் கொண்டவை. யாராவது உக்ரைன் மீது போர் தொடுக்க தூண்டியிருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.