இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா மீது வாடிக்கையாளர்கள் எழுப்பிய புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விமான சேவைகளை விமானப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அப்போது, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய பகுதிகளில் ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு சேவை வழங்குவதில் தவறு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரு சில பயணிகள் முறையான பயணச் சீட்டு வைத்திருந்தும் அவர்களை பயணத்திற்கு அனுமதிக்காமல் ஏர் இந்தியா நிறுவனம் தடுத்துள்ளது.
பின்னர், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஏர் இந்தியா மறுத்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஏர் இந்தியாவின் செயல் ஏற்புடையது அல்ல எனவும், இதற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் எதிர்காலத்தில் தொடராத வகையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் டேக் ஆப் மற்றும் லேன்டிங் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விஸ்தார நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல்,மாற்றுத் திறனாளி குழந்தையை விமானத்தில் அனுமதிக்க மறுத்த இன்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வரிசையில் இம்மாதம் புகாரின் அடிப்படையில் ஏர் இந்தியாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் இயங்கிய பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க அரசு கொள்கை முடிவு எடுத்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் உள்ளார்.