போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார்.
இவருடன் கனடா சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்னர்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்ட கனடா அரசாங்கம், லவ்ப்ரீத் சிங் வரும் 13 ஆம் திகதிக்குள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
இப்படியாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்றுள்ளனர்.
இந்த மோசடியை கனடா அரசாங்கம் கண்டறிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேர் வெளியேறும்படி அறிவித்துள்ளது. இதையடுத்து ,அந்த மாணவர்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து ஏஜென்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என விளக்கினார்.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது.
விக்ரம்ஜித் சிங்கின் வேண்டுகோள் கடிதத்தை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.
நன்றி தமிழன்