நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொல்லை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தியுள்ளது.
முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையான நெட்ஃபிக்ஸ் (Netflix) இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வு குறித்த தனது உறுப்பினர் விதிகளை மறுபரிசீலனை செய்வதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் உள்ள வீட்டிற்கு வெளியே Netflix ஐப் பகிரும் உறுப்பினர்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவோம்” என்று Netflix ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Netflix கணக்கு ஒரு வீட்டு உபயோகத்திற்கானது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் எங்கிருந்தாலும் Netflix ஐப் பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சொற்களை வழங்க அனுமதிக்கவில்லை என்று நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
”உங்கள் Netflix கணக்கை நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்த வேண்டும். கணக்கு கடவுச்சொல்லை இனி மற்றவர்களுடன் பகிர அனுமதிக்கப்படாது. பாஸ்வேர்டை வெளியாட்களுடன் பகிர்ந்தால் புதிய கணக்கு மற்றும் கட்டணங்கள் ஏற்படும்,” என நெட்ஃபிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் பார்க்கப்படும் OTT இயங்குதளம் Netflix ஆகும். மே மாதம் முதல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கடவுச்சொல் பகிர்வை நெட்ஃபிக்ஸ் கட்டுப்படுத்தியுள்ளது.
இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, குரோஷியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் வியாழக்கிழமை முதல் கடவுச்சொற்களைப் பகிர்வதைக் கட்டுப்படுத்துகின்றன.