இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு தென்மேற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலத்தீவுகளின் தீவுக்கூட்டம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.
நாட்டின் 80 சதவீதம் தாழ்வான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மாறும் கால சூழலால் உயரும் கடல் மட்டத்தின் காரணமாக, அதன் குறிப்பிடத்தக்க பகுதி இந்த நூற்றாண்டின் இறுதியில் முழுமையாக மூழ்கிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக 2100 ஆம் ஆண்டளவில் மாலத்தீவு வெள்ளத்தில் மூழ்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் பரிசோதிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு புதிய திட்டத்தை அந்நாடு முன்வைத்துள்ளது. ஒரு புதிய மிதக்கும் நகரத்தை உருவாக்குவது தான் அது.
தலைநகரான மாலேயிலிருந்து பத்து நிமிடங்களில் கடலில் பயணிக்கும் தூரத்தில், சுமார் 20,000 குடியிருப்புகளை அமைக்கும் திட்டம். இந்த முன்முயற்சியை மாலத்தீவு அரசாங்கமும் டச்சு ரியல் எஸ்டேட் டெவலப்பர் டாக்லாண்ட்ஸும் சேர்ந்து செய்ய இருக்கின்றது. நெதர்லாந்தை தளமாகக் கொண்ட வாட்டர் ஸ்டுடியோ என்ற கட்டிடக்கலை நிறுவனத்தால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான மிதக்கும் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது.
புதிய மிதக்கும் நகரம் 2 சதுர கிலோமீட்டர் பரப்பில் 7000 வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களைக் கொண்டிருக்கும். கட்டிடங்களுக்கு சூரிய ஒளிமற்றும் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்கப்படும். சுத்தீகரிக்கப்பட்ட கடல் நீர் வழங்கப்படும். மிதக்கும் நகரத்தில் போக்குவரத்திற்கு கார்கள் போன்ற வாகனங்களின்றி, சைக்கிள் ,மின்சார ஸ்கூட்டர் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
மிதக்கும் கட்டிடங்கள் நிலத்தில் கட்டப்பட்டு, பின்னர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்படும். அங்கு அவை கடல் தரையில் நங்கூரமிடப்பட்ட கான்கிரீட் தளத்துடன் இணைக்கப்படும். காயல் அமைப்பின் திட்டுகள் இந்நகரத்திற்கு அரண்களாக இருக்கும். அலைகளால் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்கும். ஜூன் மாத இறுதிக்குள் முதல் கட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும், முதல் குடியிருப்பாளர்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நகரத்தின் பகுதியாக மிளிரத் தொடங்கும்.2027 இன் இறுதிக்குள் நிலப்பரப்பில் இருப்பதைப் போல தன்னிறைவு பெற்ற நகரத்தை உருவாக்குவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இதன் கட்டுமானத்திலும் பசுமைத் தொழில்நுட்பங்களே பயன்படுத்தப்படும். இந்த கட்டிடங்களால் உலகின் இயல்பிற்கு எந்த தீங்கும் வராமல் பார்த்துக்கொள்வோம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நகரம் உருவானால், உலகின் முழுமையாக நாட்டின் அரசால் உருவாக்கப்பட்ட மிதக்கும் நகரமாக மாலத்தீவின் நகரம் அமையும். இந்த வீடுகளுக்கு மற்ற வீடுகளைப்போலவே சட்டபூர்வமான அதிகாரங்கள், பட்டாக்கள், வீட்டை வாங்கும், விற்கும் உரிமைகள் எல்லாம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நீரின் அடியில் கடற்பாசிகள், பவளப்பாறைகள் செழித்து வளரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.