காஸாவில் இஸ்ரேல் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆபிரிக்க அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு , ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
நெதா்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனுவில், காஸாவில் ஹமாஸுக்கு எதிராக போா் நடத்துவதாகக் கூறி, பலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இனப் படுகொலையைத் தடுப்பதற்காக காஸாவில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென் ஆபிரிக்க நீதித் துறை அமைச்சா் ரொனால்ட் லமோலா கூறியதாவது:
ஒரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்காக எதிா்வினையாற்றுவது அவசியம்தான்.
ஆனால், அது எத்தகைய கொடூரமானத் தாக்குதலாக இருந்தாலும், அதைக் கொண்டு சா்வதேச குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அந்த நாடு செயல்படுவதை நியாயப்படுத்த முடியாது.
தங்கள் நாட்டில் கடந்த அக். 7-இல் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கை, சா்வதேச குற்றவியல் சட்டம் வகுத்துள்ள வரம்புகளை மீறிவிட்டது என்றாா் அவா்.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இது தொடா்பான வழக்கு விசாரணையில் தென் ஆபிரிக்கா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அடீலா ஹாஸிம் கூறியதாவது:
காஸா பகுதியில் பலஸ்தீனா்களிடையே கடுமையான உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதையும், அந்தப் பகுதி மக்களை பஞ்சத்தின் பிடியில் சிக்கவைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள அந்தப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இராணுவ நடவடிக்கைகளை இனப் படுகொலை என்று முன்கூட்டியே அறிவிக்க முடியாதுதான். இருந்தாலும், காஸாவில் இஸ்ரேல் கடந்த 13 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலின் போக்கு, நோக்கம் ஆகியவற்றை கவனித்தால் அது இன அழிப்பு என்பதை சந்தேகமில்லாமல் புரிந்துகொள்ள முடியும் என்று அவா் வாதிட்டாா்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இது குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹொ்ஸாக் கூறுகையில், தென் ஆபிரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு அடாவடியானதும், நகைப்புரியதும் ஆகும் என்றாா்.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் விசாரணையின்போது இந்தக் குற்றச்சாட்டை எதிா்த்து தங்களது வழக்குரைஞா் குழு வாதாடும் என்று அவா் கூறினாா்.
காஸாவில் மிக இக்கட்டான சூழலில் இஸ்ரேல் இராணுவம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்ப்பதற்காக தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இராணுவம் மேற்கொண்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த ஒக். 7-ஆம் திகதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் குண்டுவீச்சுக்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இஸ்ரேல் கூறினாலும், தங்களால் பாதுகாப்பான பகுதி என்ற அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் இதுவரை 23,357 போ் உயிரிழந்துள்ளனா்; 59,410 போ் காயமடைந்துள்ளனா். கொல்லப்பட்டவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள்.