கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான ‘கூகுள் மெசேஜஸ்’ (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும் செய்துவருகிறது.
இந்நிலையில், அப்புதிய செய்யறிவு அம்சம் கொண்ட குறுஞ்செய்தி செயலி பயனர்களின் உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யாருடன் என்ன பேசுகிறார்கள்? எப்படி பேசுகிறார்கள்? பயனர்கள் பேசுபவருடனான உறவு என்ன? பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன? எங்கு எப்படி பேசுவார்கள்? அதாவது அலுவலகத்தில் இருந்தால் எப்படி பேசுகிறார்கள், வீட்டிலிருந்தால் எப்படி பேசுகிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி கண்காணிக்கப்படும் எழுத்து வடிவிலான உரையாடல் விவரங்கள் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள செய்யறிவு, இந்த விவரங்களைக் கண்காணித்து, வரும் குறுஞ்செய்திகளுக்கு என்ன பதிலளிக்கலாம் எனப் பரிசீலிக்கும் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் கூகுளின் இன்காங்கனீட்டோ (incognito mode) பக்கத்திலும், பயனாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்ததற்காக, கூகுளுக்கு 5 பில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இன்காங்கனிட்டோ பக்கத்தில் கண்காணிக்கப்படமாட்டோம் எனத் தவறான பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்