இந்தோனேசியாவில் உள்ள பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் இரு விமானிகள் நடுவானில் தூங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.
ஜனவரி 25-ம் திகதி சுலவேசியில் இருந்து ஜகார்த்தாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, இரு விமானிகளும் 28 நிமிடங்கள் தூங்கியதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது இருவரின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர், புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் தனது மனைவிக்கு உதவி செய்வதில் சோர்வாக இருந்ததால் அவர் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
ஏர்பஸ் ஏ320 விமானம், விமானிகளின் உறக்கத்தால், சிறிது நேரத்தில் திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி, 153 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
விமானம் புறப்பட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து, 32 வயதான விமானி, 28 வயதான துணை விமானியிடம் தனக்கு ஓய்வு தேவை என்று கூறி விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்படி கூறினார்.
ஆனால் துணை விமானியும் தெரியாமல் தூங்கிவிட்டதாகவும், முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, தனது மனைவிக்கு அவர்களது ஒரு மாத இரட்டைக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள உதவியதில் அவர் களைத்துப் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானத்தின் காக்பிட்டைத் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் வராததை அடுத்து விசாரணை தொடங்கியது.
28 நிமிடங்களுக்குப் பிறகு, தலைமை விமானி விழித்துக்கொண்டு ஜகார்த்தாவிலிருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளித்தார், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்படி இரண்டு விமானிகளும் பறக்கத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.