IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் ஆரம்ப வீரர்களாக பில் சால்ட் 5 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ஓட்டங்களிலும், ஸ்ரேயாஸ் 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் – மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ஓட்டங்கள் அடித்தார். மும்பை தரப்பில் நுவான் துஷார மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 170 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அதன்படி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அதன்படி 24 ஓட்டங்களால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.