ரஷ்ய உக்ரைன் யுத்தத்தின் போது கூலிப்படையில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதவிய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மற்றும் மெதவச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற கமாண்டோ அதிகாரி ஒருவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள இராணுவத் தளங்களுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.