காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுவதற்கான விதிமுறைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளார்.