ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.
விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு அஜர்பைஜான் அருகே உள்ள ஜோல்பா பகுதியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாயன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி, தப்ரிஸ் மாகாணத்தின் இமாம் முகமது அலி அல் ஹாஷிம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதேவேளை, ஈரான் அதிபரின் திடீர் மரணத்திற்கு ஹமாஸ் அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது.
அதிபரின் மரணம் குறித்து ஈரான் மக்களுடன் வருத்தம் மற்றும் வேதனையை பகிர்ந்து கொள்வதாக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்குப் பின்னர், ஈரான் துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பர் இடைக்கால அதிபராக வருவார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இடைக்கால ஜனாதிபதியாக 68 வயதாகும் மொக்பர், சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் மூவரடங்கிய சபையில் அங்கத்தவராக இருப்பார்.
ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் இறந்த 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த செயல்முறை ஈரானிய ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும் மற்றும் ஈரானில் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் இறுதி முடிவு எடுக்கிறார்.