கனடாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.
இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது DND மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.
மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது.
ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது.