
தமிழில் உறுதிமொழியேற்று இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்திருந்தார்.இந்நிலையில் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பியாக தமிழில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அதன் பின் 2018-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.