போர் குற்றம்…இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய புகார்

0
349

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார். பின்னர், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலு பெற்று வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் குற்ற புகார் ஒன்றை அளித்து உள்ளது. அதில், 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் ஜெனீவா ஒப்பந்த விதிகளை மீறி கோத்தபயா செயல்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போரின்போது, அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளார். சிங்கப்பூரில் இந்த குற்றங்களுக்கு ஒருவர் மீது வழக்கு தொடர முடியும் என 63 பக்க புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவானது அளித்துள்ளது. இலங்கை உள்நாட்டு போரின்போது, சர்வதேச மனிதநேய சட்டம் மற்றும் சர்வதேச குற்ற சட்டம் ஆகியவற்றின் விதிகளை கோத்தபயா மீறியுள்ளார். அவற்றில் கொலை, சித்ரவதை, மரண தண்டனை மற்றும் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்ளுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வடிவங்களிலான பாலியல் அத்துமீறல், சுதந்திரம் பறிபோதல், உடல் மற்றும் மனரீதியான கடுமையான துன்புறுத்தல் மற்றும் பட்டினியாக கிடக்க செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளன என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஆஸ்திரேலியாவில் குரங்கு அம்மை அச்சம் – மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் அவசர கோரிக்கை
Next articleஆஸ்திரேலியர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் – பல மில்லியன் டொலர்களை இழந்த மக்கள்