ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிம்லா மாவட்டத்தின் சமேஜ் பகுதி, ராம்பூர் பகுதி, குலுவின் பாகிபுல் பகுதி மற்றும் மண்டியின் பதார் பகுதி ஆகியவற்றில் ஏற்பட்ட மேக வெடிப்பு பரவலான அழிவுக்கு வழிவகுத்துள்ளது.
53 பேர் காணவில்லை மற்றும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 இடைப்பட்ட இரவில் மேக வெடிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மேக வெடிப்பு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் இதுவரை 33 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 55 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 25 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.
அறிக்கையின்படி 61 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.