பிரேசிலின் சாவ் பாலோ அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோ நகரில் உள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்தபோது வின்ஹெடோ நகரில் விபத்துக்குள்ளானதாக விமான நிறுவனமான வோபாஸ் தெரிவித்துள்ளது.
விமானத்தில் 57 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.
Voepass Linhas Aéreas விமானம் ஒரு நிமிடத்திற்குள் 17,000 அடிகள் கீழே இறங்கியதாக விமான கண்காணிப்பு தரவு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார், மேலும் சாவ் பாலோ மாநில ஆளுநர் டார்சியோ கோம்ஸ் டி ஃப்ரீடாஸும் மூன்று நாள் துக்கத்தை அறிவித்துள்ளார்.
இந்த விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொறுங்கிய போதிலும், ஒரு வீடு மட்டுமே சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்தின் டேட்டா ரெக்கார்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பதிவான தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரேசில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ATR 72 வகை விமானங்கள் பொதுவாக குறுகிய விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த விமானங்கள் பிரான்சின் ஏர்பஸ் மற்றும் இத்தாலிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டது.
பல்வேறு ஏடிஆர் 72 விமான மாதிரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களால் சுமார் 1990 முதல் 470 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் தரவு காட்டுகிறது.