காசாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரையுடன் ஜோர்டானின் எல்லைப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தலைமையிலான அரசாங்கம் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட வேண்டும் எனக்கோரி இஸ்ரேலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 750,000 இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காசா மீதான இஸ்ரேலின் போர் காரணமாக 40,939 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 94,616 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி முதல் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 239 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.