இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், கிழக்கு விக்டோரியா மற்றும் வடக்கு டாஸ்மேனியா ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் மிரியம் பிராட்பரி தெரிவித்துள்ளார்.
கனமழையால் மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழையுடன் கூடிய காலநிலை குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா பிரதேசங்களில் அடுத்த 72 மணித்தியாலங்களில் 30 மில்லிமீற்றர் முதல் 60 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.