ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்கக்கூடிய டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது என்னவோ கடந்த ஜூலையில். இது பற்றி பரவலாகப் பேசப்படுவது தற்போதுதான்.
ஒருவரது வயது, உயரம், எடை, தினமும் சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி அளவு உள்ளிட்ட தகவல்களை அளித்தால், அது அவரது மரணம் எப்போது நிகழும் என்பதை துல்லியமாகக் கூறிவிடுமாம். ஆனால், எந்த வகைகளில் எல்லாம் வாழ்முறையை மாற்றினால், இதனை மாற்றியமைக்கலாம் என்பதையும் அது கூறுகிறதாம்.
இதுவரை கிட்டத்தட்ட 5.3 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி தங்களது மரண திகதியை அறிந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 1.25 இலட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
உடல்நலம் மற்றும் உடற்பயற்சிகளில் அதிகம் கவனம் செலுத்துபவர்களுக்கு இந்த செயலி மிகவும் பிடித்தமானதாக உள்ளது. இதனைப் பயன்படுத்த இலவசம்தான் என்றாலும், இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஒருவர் எப்போது இறப்பார் என்று ஒரு திகதியைக் குறிப்பிடுகிறதோ, அதற்கான கவுன்டவுனை தொடங்கிவிடும்.
எப்போதாவது, நாம் எப்போது இறப்போம் என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோமா? ஒருவேளை அப்படி கேட்க விரும்பினால், அதற்கான பதிலாக இந்த ஏ.ஐ. செயலி இருக்கிறது.
இதில் ஒருவர் எங்கு வாழ்கிறார், சிகரெட் பிடிப்பவரா? வாழ்முறை எப்படி? என எல்லாவற்றையும் அதற்கு விளக்க வேண்டியது அவசியம். இந்த செயலியைப் பயன்படுத்துவோர், பிறந்த திகதி, இனம், எடை மற்றும் உயரம், வாழும் நாடு என அனைத்தையும் பதிவு செய்யப்படும்.
மரண திகதியை அறியாதவரைதான் வாழ்க்கை நிம்மதி என்று இதுவரை சொல்லி வந்த மனிதன், இனி மரண திகதியை அறிந்துகொள்வதுதான் நிம்மதி என்று சொல்லும் அளவுக்கு இந்த ஏ.ஐ. நிலைமையை மாற்றிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், ஒரு மனிதன் இதுவரை என்னதவறெல்லாம் செய்துவந்தானோ அதனை மாற்றுவதற்கான ஒரு விழிப்புணர்வாக இந்த செயலி உள்ளதாம்.
உடல் எடை அதிகமாக இருந்தால், அதனைக் குறைக்க அறிவுறுத்தி, அறிவுரை வழங்குவது, உடற்பயிற்சி செய்யச் சொல்வது, சிகரெட் பிடிப்பதால் எத்தனை ஆயுள்காலம் குறைகிறது என்பதை கண்கூடாகக் காட்டுவது, சரியான உணவை எடுத்துக்கொள்ள, எவ்வளவு மணி நேரம் உறங்க வேண்டும் என்று சொல்ல, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள என நமது உடல்நலனை கண்ணும் கருத்துமாகப் பார்த்து, நாம் அதனை செய்யும்போது, வாழ்நாளைக் கூட்டிக்காண்பிக்குமாம்.
எனவே, மரண திகதியை அறிந்துகொண்டால், செய்ய வேண்டிய தவறுகளை செய்யாமல், முறையாக வாழ முயல்வார்கள் என்று நம்புகிறது இந்த செயற்கை நுண்ணறிவு.