ஆஸ்திரேலியாவில் உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான உரிமைகளை வேண்டுமென்றே குறைவாக செலுத்தும் அல்லது கொடுக்கத் தவறிய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான சட்டங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்காதது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் திகதியிலிருந்து, வேண்டுமென்றே ஊதியத்தைக் குறைக்கும் ஆஸ்திரேலிய நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கிரிமினல் வழக்கு தொடர்பான குற்றத்திற்காக ஒரு நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனவும், அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் ஊழியர்கள் கௌரவமான சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.