இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடக்கு நேபாளத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பயிட்டடி என்ற மாவட்டத்தில் 4 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் ஜுலாகட் எல்லை வழியாக நேபாளத்திற்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.