கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி உள்ளது. கொரோனா, குரங்கு அம்மை தொற்று உடனான போராட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல உலக நாடுகள் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தொற்று நோய் பரவுவதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவின் சில பகுதிகள் வரலாறு காணாத வெப்பத்தின் கீழ் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகின் மற்ற சில பகுதிகள் மழை வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா தீவிர காட்டுத் தீயை எதிர்கொண்டு வருகிறது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வானிலை மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், நேச்சர் கிளைமேட் சேஞ்ச் இதழ் நடத்திய ஆய்வில் பருவநிலை மாற்றம் 58 சதவீத தொற்று நோய்கள் மோசமடைய வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை இல்ல விளைவை (கிரீன்ஹவுஸ் வாயு) குறைத்து பருவநிலை மாற்றத்தைத் தடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வில் 286 நோய்ககளில் 223 நோய்கள் காலநிலை மாற்றத்தால் மோசமடைந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.