அக்சயன் மணிவண்ணன் எழுதிய “Tamil Saiva Poetry” நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான மனநிலையில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். பார்வையாளர்கள் கைத்தொலைபேசியை இரண்டு மணித்துளிகள் சுத்தமாக மறந்து மேடையையே வைத்த விழி மாறாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நூலுக்கு அணிந்துரை வழங்கியதுடன் தலைமை உரையாற்றவும் கிட்டிய வாய்ப்பு மிக அருமையான அனுபவம்” என்று பேராசிரியர் கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியம் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
அடுத்து அக்சயன் மணிவண்ணன் ஏற்புரை வழங்கியபோது பலர் மெய்மறந்து உள்ளம் உருகி கண்ணீர் மல்க அமர்ந்து திருவாசகத் தேனைப் பருகினார்கள்.
இறுதியாக “முத்தைத்தரு பத்தித் திருநகை” உள்ளிட்ட ஐந்து திருப்புகழ் இசையை அக்சயன் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தபோது இன்னும் சிறிது பாட மாட்டாரா என்று பலர் கேட்டார்கள்.
ஆஸ்திரேலிய நாட்டில் பிறந்து வளர்ந்த அட்சயன், நாயன்மார்களையும் அருணகிரிநாதனையும் படித்து உள்வாங்கி அதை மிகச் சிறப்பான ஒரு ஆங்கில நூலாக உருவாக்கி வெளியிட்டது பாராட்டுக்குரியது.




