ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியமைத்தனர். அது முதலே அங்கு பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் வெளியே செல்லத் தடை, கல்வி கற்க, பணிபுரிய கட்டுப்பாடுகள் என தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் அங்கு பெண்ணுரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள புதிய கல்விச் சட்டத்தின்படி, தலிபான்களின் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக குறித்த புத்தகங்கள் இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள் உட்பட 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல பல்கலைக்கழக பாடப்பிரிவுகளில் உள்ள 18 பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. பாலின மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்டவை இந்த நீக்கப்பட்ட பாடங்களில் அடங்கும்.