தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தனது கட்சியின் தலைவர் என்ற முறையில் மக்களைச் சந்திக்க வந்த விஜய்யின் வேனைச் சுற்றி லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
விஜய் பேசத் தொடங்கியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் வேனுக்கு மிக அருகில் கூடியதால், கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
அப்போது, விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அம்புயூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் தனது உரையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
விஜய்யின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.