USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய மிகப்பெரிய அமெரிக்க போர்க் கப்பல் இதுவாகும்.
அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும் இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பலானது, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





