நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் Cobar நகரில் அமைந்துள்ள Endeavour சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட எதிர்பாராத நிலத்தடி வெடிப்பு சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுரங்கத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
சுரங்கத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு 20 வயதுடைய பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் சிகிச்சைக்காக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் Polymetals Resources சுரங்க நிறுவனம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து இருப்பதுடன் சுரங்கப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வெடிப்புக்கான காரணம் குறித்து நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
Endeavour சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் குறித்து மாநில பணியிடப் பாதுகாப்பு ஆணையம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





