மாணவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விக்டோரியாவில் உள்ள தனியார் பள்ளியான Ballarat Grammar, பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை புதிய குடியிருப்பு மாணவர்களைச் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை விக்டோரியன் பதிவு மற்றும் தகுதிகள் ஆணையம் (Registration and Qualifications Authority – VRQA) எடுத்துள்ளது.
Ballarat Grammar பள்ளியின் குடியிருப்புப் பதிவில் ஆறு இடைக்கால நிபந்தனைகளை ஆணையம் விதித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி வீல் கூறுகிறார்.
கடந்த ஜூன் மாதம், 12 குடும்பங்கள் இது தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தன.
கடந்த மூன்று வருடங்களாக தங்கள் குழந்தைகள் உடல் ரீதியான தண்டனை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல மாணவர்களை பெல்ட்களால் அடித்தது, நிராகரிக்கப்பட்ட உணவை வலுக்கட்டாயமாக ஊட்டியது, இருட்டில் வென்டூரி ஏரியில் ஆடைகளை களைந்து நீந்தச் செய்தது ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
1970களில் இருந்து நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பள்ளிக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 10 குடும்பங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
விக்டோரியன் பதிவு மற்றும் தகுதிகள் ஆணையத்தால் பள்ளியின் குடியிருப்பு வளாகத்தை மறுஆய்வு செய்வது குறித்து அறிவிக்கப்பட்டதாக பள்ளி வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கத்திற்கு கடந்த கால மற்றும் நிகழ்கால மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அது கூறுகிறது.
இதற்கிடையில், Ballarat Grammar பள்ளி வாரியம் ஒரு நிர்வாக நிபுணரை முழு மதிப்பாய்வு மற்றும் பயிற்சியை நடத்துவதற்கு ஈடுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.





