இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மிக உயரமான மலையான மவுண்ட் செமெரு எரிமலை, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை வெடித்தது. இதனால் அங்குள்ள அதிகாரிகள் அச்சுறுத்தல் அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தினர்.
நாட்டின் எரிமலையியல் நிறுவனம், சாம்பல் மேகங்கள் வானத்தில் சுமார் 5.6 கி.மீ உயரத்தை எட்டியதாகவும், மலை உச்சியை விட சுமார் 2 கி.மீ உயரத்தில் இருப்பதாகவும், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பிற்காக 2.5 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
லுமாஜாங் மாவட்டத்தில் ஆபத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அரசாங்க முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நாள் முழுவதும் வெடித்த எரிமலை பல கிராமங்களை சூழ்ந்தது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (VAAC) சிவப்பு விமான எச்சரிக்கையை வெளியிட்டது.





