டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான நேற்று, 21ம் திகதி கண்காட்சியின்போது சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்திய விமானப்படை இந்த விபத்தை உறுதி செய்துள்ளது. விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில்,
“டுபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது, இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
கடந்த 2 நாட்களாக டுபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்றைய அட்டவணையில் தேஜஸ் விமானம் 3 ஆவதாக இடம்பெற்றிருந்தது. தேஜஸ் விமானத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.





