இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
சிறுவர் துஷ்பிரயோக விவகாரங்களை முறையாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் 2024 நவம்பரில் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் வெல்பிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பழைமைவாத அங்கிலிக்கன் ஆயர்கள், பெண்கள் ஆயர் பதவியை வகிப்பதை எதிர்க்கின்றனர்.
மாற்றுப் பாலினத் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதை சாரா முல்லாலி ஆதரிப்பதால், ருவாண்டா போன்ற நாடுகளின் மதத் தலைவர்கள் இவரது தலைமைத்துவத்தை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி கென்டர்பரி கதீட்ரலில் நடைபெறும் விசேட வழிபாட்டுடன் அவர் முறைப்படி ஆயராகப் பொறுப்பேற்பார்.





