மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை, டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கியது.
இந்த சிலை, நவம்பர் 12, 2021 அன்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனால் திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சிலையின் 420 கிலோ பகுதி வெட்டியெடுத்து திருடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 12:50 மணியளவில், அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்களால் இந்த சிலை திருடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், சிலையின் கணுக்கால் பகுதியில் வெட்டப்பட்டு, அதன் கால்கள் மட்டுமே பின்னால் இருப்பதைக் காட்டியது. கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன், அந்த சிலையை திருடியுள்ளனர்.
இது குறித்து, இந்திய சமூக மைய நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்கல சிலையை வாங்க முயற்சிக்கும் எவரும் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகப் புகாரளிக்குமாறும் பழைய உலோக வியாபாரிகளை எச்சரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்த நாசவேலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்திய தூதரக பணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக இடங்களை குறிவைத்த காலிஸ்தான் தொடர்பான தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. இந்த சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.






