இந்தியாவில் சினிமா, கிரிக்கெட் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் நிறைந்த 10 பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் ஏப்ரல் மாதம் ஆய்வு ஒன்றை நடத்தி இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த சினிமா பிரபலங்களில் இருந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இந்தியாவில் ஆதிக்கம் வாய்ந்த நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திலும், ஜுனியர் என்டிஆர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அஜித்குமார் 6 வது இடம் பிடித்துள்ளார். 9 வது இடத்தை சூர்யா பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தி சினிமாவை சேர்ந்த அக்ஷய் குமார் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் ஆதிக்கம் நிறைந்த நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதல் இடம் பிடித்துள்ளார். ஆலியா பட் இரண்டாவது இடத்திலும், நயன்தாரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தி சினிமாவை சேர்ந்த தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், ஆலியா பட் ஆகிய மூன்று நடிகைகள் இடம்பெற்றிருந்தனர்,
இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, விளையாட்டு வீரர்களில் விராத் கோலி முதலிடத்திலும், மகேந்திரசிங் தோனி இரண்டாவது இடத்திலும் ஜோஸ் பட்லர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.