அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்காத நாளே கிடையாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ‘மாஸ் சூட்டிங்’ என்று அழைக்கப்படும் அதிக உயிர்பலிகளை ஏற்படுத்துகிற துப்பாக்கிச்சூடு சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் இந்த ஆண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மாத்திரம் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கண்காணிக்கும் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உள்பட 131 பேர் துப்பாக்கியால் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 3 குழந்தைகள் மற்றும் 34 சிறுவர்கள் உள்பட 313 பேர் காயமடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்