தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகருமான ராம்தாஸ்(66) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட இ.ராம்தாஸ் சினிமா ஆசையில் சென்னை வந்தவர் ஆரம்பத்தில் பிஎஸ் நிவாஸ், மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மோகன், சீதா நடித்த ‛ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படம் மூலம் இயக்குனராக களமிறங்கினார். தொடர்ந்து ‛ராஜா ராஜாதான்’ போன்ற படங்களை இயக்கியவர் பல படங்களுக்கு கதை, திரைக்கதையும் எழுதினார்.
ஒருக்கட்டத்தில் நடிகராக களமிறங்கிய இவர், ‛‛ வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், யுத்தம் செய், காக்கிச்சட்டை, விசாரணை, மெட்ரோ, விக்ரம் வேதா, அறம், ஆண் தேவதை, மாரி 2, நாடோடிகள் 2” உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்தார்..
சென்னை, கேகே நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த ராம்தாஸிற்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை இவரின் மகன் கலைச் செல்வன் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராம்தாஸின் உடல் கேகே நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தன.
நன்றி தமிழன்