உலகத்துடன் ஆஸ்திரேலியா கொண்டுள்ள உறவுகளை மீட்டெடுக்கப்போவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) உறுதி கூறியுள்ளார்.
மேலும் பருவநிலை மாற்றத்தைக் கொண்டுவருவதில் பின்தங்கியுள்ள நாடு என்ற ஆஸ்திரேலியாவின் பெயரை துடைத்தொழிக்கபோவதாகவும் அவர் உறுதி கூறினார். ஒரு நியாயமான ஆட்சியை தங்கள் கட்சி வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று (21 மே) நடந்த தேர்தல் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று கூறிய அவர், தங்கள் ஆட்சி நாட்டிலும் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரும் என உறுதி கூறினார்.
கட்சியின் முக்கிய தேர்தல் கொள்கைகளில் ஒன்று பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது.
அடிக்கடி தீ மூளும் யூக்கலிப்டஸ் (Eucalyptus) காடுகள், புகை சூழ்ந்த நகரங்கள், அழிந்துவரும் பவளப்பாறைகள் போன்றவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களுக்கு ஆஸ்திரேலியாவை உதாரணமாகக் காட்டும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளன. அதை மாற்ற அல்பனீசி உறுதி கூறியுள்ளார்.