இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் ஊழியர்கள் பணியாற்ற நேர கட்டுப்பாட்டை விதித்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள உத்தரவின் படி, பெண்களுக்கான வேலை நேரம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தை தாண்டி பணியாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட அந்த பெண் கையெழுத்திட்டு அளித்த கடிதம் அவசியம். அப்படி வேலை செய்யும் பெண்ணுக்கு இலவச போக்குவரத்து, உணவு, வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பணியாற்றும் இடத்தில் கழிவறை வசதி, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும். பணிசெய்யும் இடத்தில் பெண்களுக்கு எந்த விதமான பாலியல் துன்புறுத்தலும் இருக்கக் கூடாது. இவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தங்களின் உரிமகைள் குறித்து பெண்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.