ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்!!

0
365

இந்த முறை நடந்த ஆஸ்திரேலியா பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் எமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் பிரிட்டிஸ் சாம்ராஜ்ஜிய வழித்தோன்றல்கள் தான் ஆட்சி அதிகார வர்க்கமாக இருந்தார்கள். இந்த தேர்தல்தான் வெளிநாடுகளில் பிறந்த பின்னணியை கொண்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆஸ்திரேலியாவின் சொந்தக்காரர்கள் ஆகிய 7 பழங்குடியின மக்களும் MP களாக தெரிவாகியுள்ளார்கள். இதற்கு முன்பு வேட்பாளர்களாக கூட பெரிய கட்சிகள் ஆசிய வெளிநாட்டு பின்னணியை கொண்டவர்களை நிறுத்தவில்லை. இந்நாட்டின் பூர்வீக குடிகளை தவிர மற்றைய எல்லோரும் வந்தேறு குடிகளே.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவாகி உள்ளார்கள். பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டவர். அதேபோல வெளிநாட்டு அமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர் மலேசியாவில் பிறந்து இங்கே குடியேறியவர். இது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்திருக்கிறது.

1975களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்கள் மட்டும்தான் குடியேறலாம். வெள்ளையர் அல்லாத எவரும் குடியேற முடியாத அளவுக்கு white migration policy சட்டம் இருந்தது. 1975ஆம் ஆண்டு தொழிற்கட்சி அந்த சட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாற்றி தகுதியுள்ள எல்லோரும் குடியேற வாய்ப்பாக சட்டத்தை மாற்றியது. தொழிற்கட்சி மேல் சில குறைகள் இருந்தாலும் இதனால்தான் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையோர் தொழிற் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இது தான் என்னையும் கவர்ந்தது.

இந்த முறை தேர்தலில் 20க்கும் மேற்பட்ட பல இனத்தவர்களை வேட்பாளர்களாக போட்டியிட வைத்தது ஆஸ்திரேலியாவில் பெரிய மாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. பிரிட்டனில் பல்லின கலாச்சாரம் ஓரளவு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டில் அரசியலில் மற்றும் உள்நாட்டு அரசியலில் – பல்லின, பல நிற மக்கள் உள்ளார்கள். ஆனால் இதுவரை ஆஸ்திரேலியாவில் அரசியலிலும் விளையாட்டுத் துறையிலும் ஒரு நிற முறைதான் வேலை செய்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீமில் தனி வெள்ளைநிற ஆட்டக்காரர்கள் தான் உள்ளார்கள். Rugby, Basket ball தவிர கிரிக்கெட் மற்றும் ஒலிம்பிக் வீரர்களில் இதுவரை மற்றய நிறம் உள்ளவர்கள் இல்லை. ஒரு பழங்குடிப் பெண் மாத்திரம் 2000 ஒலிம்பிக் போட்டியில் மதிப்புடன் பங்குகொண்டார். இவைகளை அவதானித்த பொழுது எனக்கு ஒருவித கவலை இருந்தது. அவையெல்லாம் இந்த தேர்தலால் மாற்றி விட்டது. நமது அடுத்த தலைமுறை, அரசியலில் ஈடுபட்டு பல மாற்றங்களை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா ஈழத் தமிழர்கள்…….தமிழ் சங்கங்கள், கோவில்கள், மூத்த பிரஜைகள் சங்கங்கள் ஆகியவற்றில் President ஆக வருவது மிகப் பெரிய பாக்கியமாக கருதி போட்டாபோட்டிகளுடன் அந்த இடங்களை பிடித்து மகிழ்ந்தார்கள், மகிழ்கிறார்கள். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் தமிழர்களுக்குள் தமிழர்கள் பெருமை காட்டி தங்களை கவுரவ பிரஜைகளாக காட்டி மகிழ்கிறார்கள். இது தமிழர்களின் மரபுவழி குறைபாடு என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் குடியேறிய ஈழத் தமிழர்கள் 2000ம் ஆண்டிற்கு பிறகாவது அரசியலில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. அதற்குப் பதிலாக தொழிற்கட்சியின் சில உள்ளூர் MPக்களுடன் தனிப்பட்ட நட்பை வைத்துக் கொண்டார்கள். அவர்களை கலாச்சார விழாக்கள், கோயில் திருவிழாக்கள், தனிப்பட்ட கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்கு மாத்திரம் அழைத்து நட்பு பாராட்டி மகிழ்ந்துகொண்டார்கள். அரசியலில் பங்கு கொள்வதன் மூலமாக தான் மக்களுக்கும் தங்கள் சமுதாயத்திற்கும் சேவை செய்ய முடியும். அதுதான் முழு மக்களின் கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும். இரண்டாம் தலைமுறையில் சில தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த தேர்தலில் இலங்கை மற்றும் தமிழ்நாடு தமிழர்கள் அதிக அளவில் MP களாக வர வேண்டும் என வாழ்த்துவோம். தமிழ் – தமிழர் என்ற அடையாளம் கௌரவத்துடன் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

  • பூபாலன் சின்னப்பா
Previous articleமுத்தமிழ் விழா போட்டி பரிசளிப்பு விழா 2022
Next articleஆஸ்திரேலியாவில் அதிசய குழந்தை!