இந்தியாவின் பிரபல பாடகரான கேகே, கோல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழில் மறக்க முடியாத பல பிரபலமான பாடல்களை பாடி, ரசிகர்களை கவர்ந்தவரின் கடைசி நிமிடங்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. மாரடைப்பால் கேகே மரணடைந்ததாக கூறப்பட்டாலும், இது இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக கேகே, கோல்கத்தாவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார். மே 31 ம் தேதி இசைக் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கேகே உடனடியாக தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு திரும்பினார். பிறகு மருத்துவவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இசைக் கச்சேரியில் என்ன நடந்தது, எதனால் கேகே.,விற்கு உடல்நிலை பாதித்தது, அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேகே பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் 2400 பேர் வரை மட்டுமே அமர்ந்து நிகழ்ச்சிகளை காணலாம். ஆனால் கேகே.,வின் இசை நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியை காண அரங்கில் 7000 பேர் கூடி இருந்துள்ளனர். அரங்கத்திற்கு வெளியிலும் சிலர் கூடி இருந்துள்ளனர். ஏற்கனவே ஏசி சரியாக வேலை செய்யாமல் இருந்த அந்த அரங்கின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியில் இருந்தவர்கள் தீயணைப்பானை பயன்படுத்தி கதவை உடைத்துள்ளனர். தீயணைப்பானில் இருந்து வெளியான புகை உடைக்கப்பட்டு, கதவுகள் வழியாக அரங்கத்திற்குள் பரவி அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிக மக்கம் கூட்டம் உள்ள இடத்தில் தீயணைப்பானை பயன்படுத்தினால் Histotoxic hypoxia எனப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த திசுக்கள் விஷமாக மாறும் நிலை ஏற்படும். இந்த புகை காரணமாக ஒரு கட்டத்தில் பாடுவதை பாதியிலேயே நிறுத்திய கேகே, முகத்தை கைக்குட்டையால் மூடிய படி, மிகவும் வெப்பமாக இருப்பதாக கூறி உள்ளார். இதுதான் கேகே பேசிய கடைசி வார்த்தை.
மற்றொரு தகவலாக, கேகே.,வின் முகத்திலும், தலையிலும் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கேகே.,வின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது அவரின் பிரேத பரிசோதனை அறிவிக்கை வந்த பிறகே தெரிய வரும். இதற்கிடையில் உடற்கூறாய்வு முடிந்ததும் கேகே.,வின் உடல் அவரது குடுமகபத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.