நபிகள் நாயகம் குறித்து அவதூறு…இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய ஈரான், கத்தார், குவைத்

0
230

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. இவ்விவகாரம் அரபு நாடுகளிலும் இந்த பேச்சு எதிரொலித்தது. இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், இஸ்லாமிய மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கத்தார் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள் என்றும் அவா் கூறினாா்.

Previous article“உங்கள் குறுகிய எண்ணத்தை எதிர்க்கிறோம்” – இஸ்லாமிய கூட்டமைப்புகளுக்கு இந்தியா கண்டனம்
Next articleஆபாசத்தை தூண்டும் விளம்பரத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது “லேயர் சாட்” நிறுவனம்