முகமது நபி குறித்த சர்ச்சை…இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பிற்கு இந்தியா விளக்கம்

0
250

இந்தியாவில் முஸ்லீம்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட நபரின் கருத்தை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக பார்க்க கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவில் முஸ்லீம்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய கூட்டமைப்பு, ஐ.நா.விடம் முறையிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை பிரிவினைவாத நோக்கத்தில் தவறான கருத்துகளை திட்டமிட்டு பரப்புவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்து மதங்களின் மீதும் இந்தியா பெருமதிப்பு வைத்திருப்பதாகவும், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கத்தார், குவைத், ஈரான் மற்றும் சவுதி அரேபியா, இந்திய தூதரிடம் விளக்கம் கேட்டன. ஆனால், நபிகள் குறித்த பேச்சு, தனிப்பட்ட நபரின் கருத்து என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சர்ச்சைக்குரிய கருத்துக்கு சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இஸ்லாமியர்களின் உணர்வை தூண்டும்வகையிலுமான நடவடிக்கைகளை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்திய தூதரை வரவழைத்து பாகிஸ்தான் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, தங்கள் நாட்டின்மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு பதிலாக பாகிஸ்தான் தனது நாட்டு மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகளை தொடர்ந்து ஒடுக்குபவர்கள், அடுத்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரை எப்படி நடத்துவது என்பது பற்றி கருத்து தெரிவிப்பது வேடிக்கையானது என்று இந்தியா கூறியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவை உலக அரங்கில் பாஜக தலைகுனிய செய்து விட்டதாக என காங்கிரஸ், ஆம் ஆத்மி, டி ஆர் எஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Previous articleஇறந்த கணவர் பாம்பாக வந்துள்ளார்’ – வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் வாழும் பெண்
Next articleவிரைவில் மனைவி நயன்தாராவுடன் உங்களை சந்திப்பேன்- திருமண அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்