‘விக்ரம்’ பட வெற்றி.. இயக்குனருக்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசு வழங்கிய கமல்ஹாசன்

0
311

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 2022-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் ‘விக்ரம்’ அதிக வசூலை குவித்த படமாக உருவெடுக்கும் என வர்த்தக ஆலோசகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதால் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜிற்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக் கமல் வழங்கியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடித்தத்தில் “அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தால் நெகிழ்ந்துபோன இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்.. இதைப் படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நன்றி ஆண்டவரே” என பதிவிட்டிருந்தார்.

Previous articleஇலங்கையின் நிலைமை மோசமடையும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Next articleகாஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்கும் புதிய தீவிரவாத அமைப்பு